Thursday, May 20, 2010


அழகு தேவதை!


அன்ன நடை போட்டு
அழகு தேவதை வருகிறாள்...!
ஆர்ப்பரித்தெழும் அலைகடலும்
அடங்கிப் போகும்!

தகதகக்கும் மேனியால்
பிரபஞ்சத்தின் மௌனமும்
உடைந்து போகும்!

மூச்சுக்காற்றின் வெளிப்பாட்டில்
அண்டங்களின் சராசரமும்
தெளிந்து போகும்!

புன்னகையின் மௌவலில்...
பூங்கொத்துகள்
உதிர்ந்து போகும்!

காந்த விழி வீச்சில்
புவியீர்ப்பு விசையும்
உறைந்து போகும்!

செவ்வாயின் எச்சிலும்
செவ்வாய் கிரகத்தின்
நீராய் மாறும்!

முகத்தின்வசீகரத்தில்
முழுமதியும் நாணத்தில்
மங்கிப்போகும்!

துள்ளும் முன்னெழில்
கலைமானின் வரிகளையும்
மறையச் செய்யும்!

இடைமுகத்தின் ஒற்றைக்கண்
மது நிரப்பிய கோப்பையையும்
தோற்கச் செய்யும்!

அசைந்தாடும் பின்னெழில்
இசை மீட்டும் யாழையும்
மயங்கச் செய்யும்!

வெண் பஞ்சுப் பாதங்கள்
தண்மை மலரையும்
ஏங்கச் செய்யும்.

ஆம்!
அன்ன நடை போட்டு
அழகு தேவதை வருகிறாள்
ஆர்ப்பரித்தெழும் அலைகடலும்
அடங்கிப் போகும்!!!

தனிமை!




எனக்காய்

பற்பல முகங்களில்
சொற்சில நவில நட்பு வட்டம்!

எனக்கான...

அற்புத நண்பன்
தனிமை மட்டுமே!

தனிமையின் தன்மைகள்
ஆர்ப்பரிப்பும்...அமைதியும் கலந்தவை!

மோனங்களின் மறைவுகள்
இங்கேதான் புலப்படும்.
கானங்களின் நிறைவுகள்
அங்கேதான் பலப்படும்!

நம்மை நமக்கே
அடையாளம் காட்டுகின்ற கண்ணாடி
உண்மைகளை நாட்டுவதில் முன்னோடி!

ஞானம் புதைந்த நொடிகள்...
வானம் அளக்கும் அடிகள்!

எனை நோக்கி நீண்டு வரும்
தென்றல் கூட ஆயிரம் கவி மொழியும்!

ஆனந்தங்களின் தாண்டவம்
தனிமையோடும் வியாபிக்கும்!

அற்பமான காலங்கள்..
சிற்பமான கோலங்கள்!

தனிமை தரும் பாடங்களில்
வாழ்க்கையின் வேடங்கள்!

கடந்த கால ஞாபகமாய்
முடிந்து போன ஆதங்கமாய்
முற்றுப் பெறா நட்புகளுக்கு
தனிமையொரு தொடர் கதை!

கனவுகளில் நிறைந்து
நினைவுகளில் உறைந்து
தவிக்கின்ற காதல்களுக்கு
தனிமையொரு தொடர் கதை!

நிம்மதிகளைத் தொலைத்து
சந்ததிகளை நினைத்து
ஏங்குகின்ற மனங்களுக்கு
தனிமையொரு தனிச்சிறை!

தோல்வி தழும்பிய மனிதருக்கு
தனிமையின் கூரிய சிந்தனை- ஒரு
வழி தேடல்!

முன்னோக்கி எழுந்தால் வெற்றி!
பின்னோக்கி விழுந்தால் மரணம்!

பள்ளத்தில் வீழ்ந்த
உள்ளத்தின் உணர்வலைகளுக்கு
தனிமை என்பது அழுகை!

புகழ்ச்சிகளில் உருகி.. உருகி...
நெகிழ்ச்சிகளில் மருகி.. மருகி...
மகிழ்கின்ற ஆத்மாக்களுக்கு
தனிமை என்பது பூபாளம்!

ஆடம்பர அலங்காரம் துறந்து
ஆணவ அகங்காரம் மறந்து
ஆன்மீகம் இழைந்தோடும் ஜீவன்களுக்கு
தனிமை என்பது சாந்தி!

தனிமையொரு கலை
வாங்க இயலா விலை!

நுட்பங்கள் எல்லோருக்கும் தெரியாது
ரகசியங்கள் எல்லோருக்கும் புரியாது!

கவிஞனுக்கு
தனிமையென்பது...

ஒரு குழந்தை!

கொஞ்சுவதும்..
கெஞ்சுவதும்...
அதீதமாய்!




நினைவில்...!






மெல்லினமே! நீ

புன்னகைக்கும் போது
புன்னை மரப்பூக்கள்
சிந்தும் மகரந்தம்- நினைவில்!

கண்களால் எனைக்
கைது செய்யும்போது
மழைச் சாரல்கள்- நினைவில்!

அருகில் அமர்ந்து
பேசும்போது
குளிர் தென்றல்- நினைவில்!

என் தோள் சாய்ந்து
நடக்கும்போது
இனிய கவிதைகள்- நினைவில்!

உன் வெட்கத்தினை
ரசிக்கும்போது
சுகமான தீண்டல்கள்- நினைவில்!

எனக்காய்க் காத்திருக்கையில்
உணர்வுகள் உயிர்த்தெழும்
கடலலைகள்- நினைவில்!

நீ உயிர்வாழ்வது
எனக்கென்று சொல்கையில்
ஆர்ப்பரிக்கும் காதல்- நினைவில்!

எந்தன் கவிதைகளை
மனனம் செய்கையில்
இதமான அரவணைப்புகள்- நினைவில்!

உன் மடி மீது- என்
தலை சாய்க்கையில்
அற்புதமான தாயன்பு- நினைவில்!

தலை முடிகளுக்கிடையில்
விரல் தொடுத்துக் கோதுகையில்
உண்மையான நட்பு- நினைவில்!

எனக்குப் பிடிப்பதெல்லாம்
உன்னால் நேசிக்கப்படுகையில்
கவின் மிகு காட்சிகள்- நினைவில்!

என்னில் பொய்க் கோபம்
காட்டும்போது
ஈர விறகுகள்- நினைவில்!

உணர்வு பூர்வமாய்
நீ அழுகையில்
எதிர்பாரா நிகழ்வுகள்- நினைவில்!

உன் வருகையைச் சொல்லும்
ரோசாப்பூ நறுமணம் வீசுகையில்
மெல்லிய ஸ்பரிசங்கள்- நினைவில்!

எனை யாருக்கும் விட்டுத்தர
நீ மறுத்திடும்போது
கண்ணீர்த்துளிகள்- நினைவில்!


நானொன்றும் பைத்தியமல்ல!





மடந்தையே! என் காதல்
கடந்தையே! உன் நினைவுகளென்
உடந்தையே!

இசையே! எனை ஒட்டிய
பசையே! வாழ்வின் பெரும்
நசையே!

மங்கையே! நில்லாதோடும்
கங்கையே! நீதானடி
நங்கையே!

நறையே! என்னிதயத்தின்
கறையே! உயிரின்
உறையே!

ரதியே! பாய்ந்தோடும்
நதியே! நான் ரசிக்கும்
மதியே!

ஒளியே! எந்தன் இரு
விழியே! காதல் தீவின்
வழியே!

சிலையே! என்னில் அடித்திட்ட
அலையே! மனம் விரும்பும்
கலையே!

காற்றே! பொங்கி வரும்
ஊற்றே! சுடர் விடும் ஒளிக்
கீற்றே!

மானே! நான் பருகும்
தேனே! சுதந்திரப் பறவையின்
வானே!

ஒரு முத்தம்
போதுமென்று சொல்ல
நானொன்றும் பைத்தியமல்ல..!

முத்தத்தை மொத்தமாய்
குத்தகைக்கு எடுத்த
காதலன்- ஆயுளின் அந்தி வரை!



ஒரு காதலன் - தன் காதலிக்காய் !



வழி மீது விழி வைப்பதா?
விழியினுள் வழி பார்ப்பதா!

இதயத்தில் இறங்கி
ஆரிக்கிள் வென்ட்ரிக்கிள்
அறைகளில் நம் காதலை
எழுத வேண்டும்.

உயிரின் கருவே!
கனவுகளின் ராகங்களில்
நீ பேசுகிறாய்...
கவிதைகளின் மரபுகளில்
நீ ஆர்ப்பரிக்கிறாய்!

சந்தித்த பொன் தருணங்களைச்
சிந்திக்கையில் கண்கள் அருவியாய்...!

வார்த்தைகள் தேய்பிறையாய்...
வருத்தங்கள் வளர்பிறையாய்..!

கவலைகளில் கண்களுக்கும்.. வலிகளில்
இதயத்திற்கும் தலைமைப் பதவி!

மனதைச் சுற்றிச் சுவருமில்லை...
இருளில்லா இரவுமில்லை!
காற்றில்லா மரமுமில்லை...
நீயில்லா உயிரில் ஈரமுமில்லை!




ஒரு காதலி-தன் காதலனுக்காய்!


என்னவனே! எந்தன்
மன்னவனே!

இதயத்தில் பின்னிய
வலைகளில் சிக்குண்டே
கிடக்கின்றேனோ - இன்னமும்!

வார்த்தைகளில் உனைத்
தேடுகிறேன்..நீயோ
அர்த்தங்களில் புதைந்து
கிடக்கிறாய்!

கவிதைகளில் உனைப்
பார்க்கிறேன்..நீயோ
கண்ணீரில் கரைந்து
போகிறாய்!

தனிமைகளில் உனை
வேண்டுகிறேன்..நீயோ
இனிமையில் உறைந்து
நிற்கிறாய்!

இரவுகளில் உனை
நினைக்கிறேன்..நீயோ
இருளினில் தொலைந்து
போகிறாய்!

உணர்ச்சிகளில் உனை
தீண்டுகிறேன்..நீயோ
உயிருக்குள் நிறைந்து
கிடக்கிறாய்!

Wednesday, May 19, 2010


புரட்சிகளில் பயணித்து...!



குளிர்வாட்டிடும்
காலைப் பொழுதுகளில்
தளிர் ஊட்டிடும்
சோலை வனமாய்...!

கண்களில் அழகிய
கவிதை பதுக்கி
இதயத்தில் அற்புத
இன்பம் செதுக்கி...!

இனிதாய் வரவேற்கும்
இந்திரவில் பெண்ணே!

என் உணர்ச்சிகளைக்
கிளர்ச்சியடையச் செய்யாதே!

நான் மலர்ச்சிகளைத் தேடி
வறட்சிகளின் பாதையில்
புலர்ச்சிகளை நோக்கி
புரட்சிகளில் பயணித்து
எழுச்சிகளுக்கு உயிரூட்டிக் கொண்டிருக்கிறேன்!


நீயும்!


மேக கூட்டத்தினிடையே
வெட்கப்பட்டுப் பதுங்கும்
வெண்மதி போன்று தானடி - நீயும்
வெட்கும்போது!

தீண்டல்களால் உணர்ச்சிகளைத்
தூண்டிவிட்டு ஓடி மறையும்
தென்றல் போன்று தானடி - நீயும்
தீண்டும்போது!

அடாத மழையிலும்
விடாது அதிரும்
இடியேறு போன்று தானடி - நீயும்
கோபிக்கும்போது!

உடலெங்கும் நில்லாது
பாய்ந்தோடி உயிரூட்டும்
உதிரம் போன்று தானடி - நீயும்
முத்தமிடும்போது!

ஆதவனின் கதிர்வீச்சை
தணித்து நிழல் தரும்
விருட்சம் போன்று தானடி - நீயும்
வருடும்போது

இதயத்தில் மலர்ந்து
மணம் பரப்பும் பூவினைப்
பறிப்பது போன்று தானடி - நீயும்
பிரியும்போது!



"உணர்வுகள்"!


சுவாசக் காற்று கரைவதாய்
மூச்சு நெருப்பு அணைவதாய்

பேச்சு நீர் வற்றுவதாய்
இதய மலை உடைவதாய்
மனப் பாலைவனம் அழிவதாய்
நரம்பு காடு எரிவதாய்
கனவு வானம் மறைவதாய்
கற்பனை நிலம் சிதைவதாய்
எண்ணக் கடல் தொலைவதாய்
எழுத்து அலை கலைவதாய்
இரத்தவானில் உறைவதாய்
கவிதை புதையல் களைவதாய்
உடல் சிற்பம் உடைவதாய்
உயிர்ப் பறவை அலைவதாய்
ஓர் உணர்வு.

வெளிப்படையாய் அழைத்த
வசந்தம்....
அடிப்படை வாழ்வின் சுகந்தம்.

ஆதியிலே அவிழ்த்த ஆனந்தத்தை
பாதியிலே அணைத்ததால்!!!

Tuesday, May 18, 2010

பெருவெள்ளம்!


போர் மறவனின்
ரத்தம் வெற்றிப் பாதையில்
பெருவெள்ளமாகும்..!

இலட்சியம் அடைந்திட
நித்தம் உன் கனவும்
பெரு வெள்ளமாகட்டும்!

தாய் பொழியும்
முத்தம் சேய் மனதில்
பெரு வெள்ளமாகும்..!

இலக்கியமறிய உன்
சித்தம் தேன் தமிழில்
பெரு வெள்ளமாகட்டும்!

மேகம் ஒழுகும்
சத்தம் புவனிப்பரப்பில்
பெரு வெள்ளமாகும்..!

இக்கால அநீதிக்கெதி்ராய்
யுத்தம் புரியவுன் படைபலம்
பெரு வெள்ளமாகட்டும்!

இளைஞனே!



வறுமை கண்டு பயந்தவனும்
மழை தரா மேகமும் -ஒன்று!

தோல்வி கண்டு துவண்டவனும்
சிறகு இழந்த பறவையும் -ஒன்று !

இருள் கண்டு நடுங்கியவனும்
பிராண வாயுவில்லாக் காற்றும்-ஒன்று !

இன்னல் கண்டு தடுமாறியவனும்
சுழற்சியற்ற புவிக்கோளமும்-ஒன்று!

எதிரி கண்டு தடம் புரள்பவனும்
குருதி அருந்தா வாளும்-ஒன்று!

வெற்றி இல்லாது பயணிப்பவனும்
ஒளியில்லாப் பகல் பிறையும்-ஒன்று!

தன்னம்பிக்கை இல்லாது வீழ்பவனும்
உயிர் இல்லாத உடம்பும்-ஒன்று!

இலட்சியம் இல்லாது வாழ்பவனும்
இலக்கியம் இல்லாத மொழியும்-ஒன்று!

சாதனை செய்யா இளவட்டமும்
சரித்திரம் காணா நாடும்-ஒன்று!

மீண்டும் வேண்டும்!


பரந்து விரிந்த நீள் உலகில்
விரைந்து செல்லும் வாழ்க்கை.
திறந்து பேச நிறைய இருந்தும்
குறைந்து நில்லும் நாழிகை!

மறந்து போகும் மனங்களில்
இறந்து போகும் உருவங்கள்
எதுவுமே நிலையில்லை...!

நினைவுகள் மட்டும்
நிழலோடு போராடுகின்றன!

மீண்டும் வேண்டும்
நட்பின் இனிய தீண்டல்கள்!

இதயத்தின் தூண்டல்கள்
என்றும் உயிர்த்தெழுந்திட்டே
இருக்கிறது!

Monday, May 17, 2010

விடை தேடிப் புறப்படு!

வாழ்க்கை எனும் போரில்
வாள் வீசத் தெரியாமல்
வாடிப்போன மனிதா!
வரையறைகளை வகுத்து
வல்லவனாய் ஆகிவிடு!

இலட்சிய விழிப்போடு
இலக்கை அடையத் தெரியாமல்
இருண்டு போன மனிதா!
இன்னல்களை உடைத்து
இமயமாய் உயர்ந்திடு!

கடமை எனும் கடலில்
கப்பல் ஓட்டத் தெரியாமல்
கவிழ்ந்து போன மனிதா!
கவலைகளைத் துறந்து
கரையை கண்டுவிடு!

விடியல் அறியாக் காட்டில்
விளக்கேற்றத் தெரியாமல்
விழுந்து விட்ட மனிதா!
விசும்பல்களை மறந்து
விடை தேடிப் புறப்படு!

காதல்...காமம்!





காதல் பிழை செய்யாமல்
காம மழை பெய்யாமல்
உலகினில் உயிர்களில்லை

உணர்ச்சி எழாதவள்
பெண்ணில்லை..
புணர்ச்சி தழுவாதவன்
ஆணில்லை!

மென்மையாய்க் கொல்லாதது
பெண்மையில்லை...
உண்மையாய் வெல்லாதது
ஆண்மையில்லை!

சூழ்ந்து முடிச்சிடாதோள்
பெண்ணவளில்லை...
ஆழ்ந்து முத்தெடுக்காதோன்
ஆண் மகனில்லை!

பேரின்பம் அடையாதவள்
பெண்ணில்லை...
ஐம்புலனின்பம் அறியாதவன்
ஆணில்லை!

நேசங்கள் சொலப்படாதது
காதலில்லை...
வேசங்கள் புலப்படாதது
காமமில்லை!


ஆயுதம்!





ஏ! வாள் முனையே!
என் கூர் முனையே!

தமிழைக் காதலிக்கச் செய்ததில்
நீயும் ஓர் ஆதாரம்...! நீதானே
எந்தன் கூடாரம் ...! நீ சிந்தும்
கவி தானே என்றுமென் ஆகாரம்!

கடந்ததையும்...கடக்கவிருப்பதையும்
கனவாக நினைத்தால்...கடக்கின்ற
ஒவ்வொரு தருணமும் கருகிடுமே...
நிகழ் காலம் செவ்வனே செய் - என்று
கற்பித்தது நீ தானே!

கர்ப்பக் கிருகத்திலிருந்து
அற்பக் கிரகத்திற்கு வெளிவந்த
நாள் முதல்...!

எங்கு நோக்கினும்
ஆயுதம் தாங்கிய போராட்டம்!

அம்பு முதல் அமிலம் வரை...
ஆயுதம்!
ஈட்டி முதல் தோட்டா வரை...
ஆயுதம்!
வெடிகுண்டு முதல் அணுகுண்டு வரை...
ஆயுதம்!

பேனா ஆயுதம்
வானம் தாண்டித் துளைக்கும்...
கூர் மழுங்குவதில்லை!
மரபுக்கவி தொட்டு
ஹைக்கூ வரை...
இலக்கணம் முதல்
இலக்கியம் வரை...
வாழ்க்கை துவங்கி
வரலாறு வரை...!

பேனா கண்டிடாத ஞானமா!
புலவன் விளம்பாத தத்துவமா?

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
கவிஞனுக்கு நீயே ஆயுதம்!

மௌன மூச்சு ...!



தருணங்கள் தேடி வருவதில்லை...
மரணமும் இப்படியே!
நம்மில் இடைவெளி உருவாகும்போது
காலத்தின் இடைவேளை உருகும்
ஒரு நாளாவது!

நேச அம்புகள் எய்த பின்னர்
நேற்றைய நினைவுகள் கலைந்திடுமா?
சுவாச மூச்சு தொடரும் வரை
நாளைய உறவு பலப்படுமா?
'புரிதல்' வாழ்க்கை புலர்தலின் பாதை
வேண்டுமென வேண்டும்...
வேண்டாமென தீண்டும்...
மூச்சுக் காற்று உறையும்...
முனங்கி முனங்கிக் கரையும்
புரிதலற்ற வாழ்க்கை
உலர்ந்திட்ட பூவாய்...!
மனதில் என்ன மௌனம்...
வார்த்தை இறந்த போகும்.
அனுதினமும் அனுபவம்...
அன்பும்...அழுகையும்...
அருகில் அமர்ந்த அரவணைப்பு
ஆற்றாமையின் அசல் அவதாரமாய்!
வார்த்தைகள் வசப்படாமல்
வாழ்க்கையை வசியமாக்கி
வெல்லவியலா...
மௌன மூச்சு மரணத்தின்
மலர்க்கொடி!

இளைஞனே! - III


சுகம் கண்டு மயங்காதே
வலி கண்டு கலங்காதே

ஒரு நொடி வலி
ஓராயிரம் சுகத்தைக்
கொல்லும்!
ஒரு நொடி சுகம்
ஒரு கோடி வலியை
வெல்லும் !

சுகமும் வலியும்
மானுடத் தராசின்
இரு தட்டுகள் !

பாராட்டுகளைப் பெறப்
போராடுவது-சுயநலம்.
போராடியே பாராட்டுவது
சுயபலம் !

பாராட்டுகளும்
போராட்டங்களும்-ஒரு
நாணய இரு பக்கங்கள்!
காதலன்!



எனைப் புரியாப் புதிரே!
எனை அறியா மனமே!

ஆர்ப்பரித்தெழும் ஆழியலைகளாய்
கூர்மையான கனவுகளின்
காதலன் - நான்!
அதி பயங்கரமாய் முழங்குகின்ற
மதி வண்ணமான லட்சியங்களின்
காதலன் - நான்!
இடைவிடாது பொழிகின்ற
அடைமழையான கவிதைகளின்
காதலன் - நான்!
வாள்முனையைக் காட்டிலும்
கூர்முனையான பேனாவின்
காதலன் - நான்!

ஈர விறகே!

எனைப் பார்த்து
மகிழ்ந்தாலும்...நெகிழ்ந்தாலும்
இவற்றுக்கு மட்டுமே
காதலன்...! உனக்கல்ல!!!


கல்லறைக் காதல்!




அமாவாசை பௌர்ணமியில்
வெண்மதிக் கடலிடை காதல் பூத்து
அலைகள் மோதல் போல்வதே...!

இளவேனிற் பனிக்காலத்தில்
நின் கண் என்னிடைக் காதல் பூத்து
மென்மையாய்ச் சாதல் செய்கிறதே!

சிந்தனைச் சிதறலில்
கருத்துகள் சேமித்துக் கவிகாணும்
கவிஞனது கவனம் போல்வதே...!

புன்னகைப் பூக்களால்
பொன்னகை செய்வித்துப் புவியாளும்
நின்னினைவுகள் மௌனம் புரிகிறதே!

காலத்தின் கோலங்களில்
இடிந்து வீழ்ந்த கிணற்றினில்
ததும்பும் நீர் போல்வதே...!

கனவுகளின் ராகங்களில்
எனைப் புரியா உன்முகம்
கல்லறையிலும் கரையாமல் தெரிகிறதே!


அத்தான்!


சைவம் கொண்டவுன்
அசைவக் கண்களின் ஊடுருவல்கள்
தசைகளுக்குள் புகுந்த முதல்நொடியின்
இசைகள் இன்னுமென் குருதியில்!

தீண்டிப் போன விரல்களும்
தாண்டவம் செய்த இதழும்
யாண்டும் எந்தன் சுகமே!

மார்பின் மீது கண்விழித்து
அயர்வேன்; பரியந்தமில்லாயென்
ஆர்வங்களையெல்லாம் நிதமும்
கூர் தீட்டி உரசுவேன்!

குளிரோடு இதம் சேர்த்து
களியூட்டும் எனை அள்ளி
ஒளியூட்டும் உன் காதல்!

அத்தான் என்றேங்குமெனை
பித்திகமாய் வருணித்து
கொத்திடும் உன் காமம்!

Sunday, May 16, 2010

கண்ணியமே!



பொழுதுகள் முழுதும்
இறுக்கத்தோடு கழிவதில்
பொருத்தம் நீளுமா?

சிரிப்போடும் சிந்தனையோடும்
திருப்பங்கள் நிறைந்ததே
மனங்களின் வருத்தம் நீக்கி
மனித வாழ்வின் விருப்பங்களைக்
கூட்டும்!

வார்த்தை அம்பு
வாழ்க்கை அன்பைத் துளைக்கும்.
அன்பின் வலி - இன்ப மயக்கம்!
அம்பின் பலி - துன்பக் கலக்கம்!

கலங்கிய கண்களைவிட
மயங்கிய கண்களில்தான்
மோகம் தோன்றும்!

சோகம் கொண்ட
இல்லறம் உயிரற்றது.
மோகம் தீண்டும்
நல்லறம் உன்னதம்!

உன்னதப் பரிணாமம்
உயிரின் பிரளயம்!
காதலும் காமமும்
கண்ணியமே...நம்பிக்கையும்
நன்னடத்தையும் சிதையாத வரை!

நல் பூவே!





இதயத்திற்கும் இதயத்திற்கும்
இடைவெளியில் நடப்பட்ட செடியே!
அன்பில் படர்ந்த கொடியே?
அற்புதமாய் மலர்ந்த நல் பூவே?

விழியோரம் வழிந்தோடும்
வெள்ளித்துளிகள் ஆழப்பதிந்த
அன்னியோன்ய அடைமழையாய்...
உயிரின் மூச்சுகள்
அவிழ்ந்து விடாதா...என
ஆர்ப்பரிக்கும் உணர்ச்சிப் பெருக்கு!

இருளை அடக்கிய இரவுகளில்
மௌனம் சேமித்துத் துயிலும்
ஜீவராசிகளின் மத்தியில்...
கடமை தவறாது எழுதும்
கவிஞனின் மௌனத்தை
உடைத்து விடுகிறாய் - நீ!

நினைவில் புது உதயம்
இரவில் ஒரு பிரளயம்
காதல் கூட விரயம்...!


Friday, May 14, 2010

இளைஞனே - IV!


உணர்ந்திடு வாழ்கை வட்டம் ...
உடைத்திடு தோல்விக் கட்டம் !
துணிந்திடு வதைகள் பட்டும் ...
துரத்திடு நரிகள் கொட்டம்!
வரைந்திடு நீயொரு சட்டம் ...
வகுத்திடு உன்னில் திட்டம் !
போராடு வியர்வை சொட்டும்.....
போர்த்திடு லட்சியப் பட்டம் !
நினைத்திடு குறிக்கோள் மட்டும்...
நிச்சயம் வெற்றி எட்டும்.!